அற்புதம் மிகுந்த திருத்தலம்:-
கங்கா தரங்க ரமணீய ஜடாகலாபம்
கௌரி நிரந்தர விபூஷித வாமபாகம்!
நாராயண ப்ரியமனங்க மதாபஹாரம்
வாராணஸீ புரபதிம் பஜ விச்' வநாதம்!!
திருக்கயிலாயத்தை விட உயர்ந்த திருத்தலம்:-
பெரிய கோவில் என்றால் அனைவரின் நினைவுக்கும் வருவது தஞ்சை பெரிய கோவில். ஆனால் பெரியகோவில் என்ற பெயரில் மற்றொரு திருத்தலமும் இருக்கிறது அது "திருக்கோடிக்கா" திருத்தலம்.
இங்குள்ள ஈசன் கோடீஸ்வரர் என்ற பெயரில் சுயம்பு மூர்த்தியாகவும், அம்பாள் திரிபுரசுந்தரி என்ற திருநாமத்துடன் அருள்பாளித்து வருகின்றார்.
இத்தலத்தில் ஈசன் சதுர பீடத்தில் உயர்ந்த பாணத்தோடு காண்போரைக் கவரும் வண்ணம் வீற்றிருக்கிறார். இங்குள்ள கரையேற்று விநாயகரை
சதுர்த்தி நாளில் வழிபட்டால் நம் குறைகள் யாவும் களைந்து நல்ல வண்ணம் வாழவைப்பார். இம்மையிலும்,மறுமையிலும் பக்தர்களை கரையேற்றுபவர் என்பதால் இவர் கரையேற்று விநாயகர் என்று அழைக்கப்படுகிறார். இத்தலத்தில் பிரம்பு ஸ்தல விருட்சமாக இருக்கிறது. சிருங்க தீர்த்தம் மற்றும் காவிரி ஸ்தல தீர்த்தமாக விளங்குகிறது.
சனி பகவானும், எம தர்மனும் எதிரெதிர் சன்னதிகளில் உள்ளனர். அதேபோல் சித்ர குப்தரும், துர்வாச மகரிஷியும் எதிரெதிர் சன்னதியில் வீற்றிருக்கிறார்கள். இவ்வாலயத்தில் உள்ள சனி பகவான் 'பால சனி'
என்று அழைக்கப்படுகிறார். இத்தலத்தில் சனி பகவான் தலையில் சிவ லிங்கம் உள்ளது. இங்கு அவருக்கு காக வாகனத்திற்கு பதிலாக கருட வாகனம் இருப்பது மிகச் சிறப்பு.
தன் கணவனைக் கொன்று விட்டு, விபச்சாரியாக வாழ்ந்த 'லோக காந்தா'
என்ற பெண் தன்னுடைய இறுதி காலத்தில் இந்த தலத்திற்கு வந்தாள்.
அவள் மரணமடைந்ததும் எம தூதர்கள் அங்கு வந்தனர். அதற்குள் சிவ தூதர்கள் சென்று அந்த பெண்ணை சிவ லோகத்திற்கு அழைத்துச் சென்று
விட்டனர். எமன் சிவ பெருமானிடம் காரணம் கேட்டான். அதற்க்கு சிவ பெருமான் 'திருக்கோடிக்கா' தலத்திற்கு வந்து என்னை தரிசிப்பவர்களை அண்ட உனக்கு உரிமை இல்லை' என்றார்.
காசியைப் போல இந்த தலத்தில் வாழ்பவர்களுக்கும் எமபயம் இல்லை. காசியைவிட ஈசனின் அருள் மிகுந்து உள்ள தலம் இது. ஒரு சமயம் கைலாயத்தையும், திருக்கோடிக்காவையும் ஒரு தராசில் வைத்துப் பார்த்தப் போது திருக்கோடிக்கா உயர்ந்து கைலாயம் கீழே போய் விட்டதாம். சிவபெருமானின் கைலாயத்தை விடவும், சிவன் விரும்பி
உறையும் தலம் இந்த திருக்கோடிக்கா ஆலயம். எனவே கைலாயம் செல்ல முடியாதவர்கள் வாழ்வில் ஒரு முறையாவது திருக்கோடிக்கா வந்து ஈசனை தரிசனம் செய்ய வேண்டியது அவசியம்.
ஒரு முறை ஆழ்வார்கள் திருப்பதி வெங்கடாஜலபதியை தரிசிக்க திருப்பதி சென்றனர். திருப்பதி வெங்கடாஜலபதி ஆழ்வார்களுக்கு காட்சி கொடுக்காமல்,' திருக்கோடிக்காவில் எனது தங்கை திரிபுர சுந்தரி ஆவணம் செய்வாள்' என்று அருளினார். இதையடுத்து ஆழ்வார்கள் திருக்கோடிக்கா வந்தனர். அப்போது ஆழ்வார்களுக்கு இத்தலத்தில் வீற்றிருக்கும் திரிபுர சுந்தரி அம்பாள் வெங்கடாஜலபதியாக காட்சி அளித்தார்.
நந்தி தேவரின் கொம்பினால் உண்டான இத்தல தீர்த்தம் சிருங்கோத்பவ தீர்த்தம் மிகச் சிறப்பானது. இத்தலம் வந்து ஸ்வாமியையும், அம்பாளையும், கரையேற்று விநாயகரையும் வழிபட்டால் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும்.
யஜ்ஞ ஸ்வரூபாய ஜடாதராய
பினாக ஹஸ்தாய ஸனாதனாய!!
திவ்யாய தேவாய திகம்பராய
தஸ்மை யகாராய நம: சி' வாய!!
Comments
Post a Comment