சகல நன்மைகளும் வழங்கும் சாளக்கிராம மந்திரங்கள்:-
சாளக்கிராம உபாசனாவை செய்ய விரும்புபவர்கள் தகுந்த சான்றோர்களை அணுகி அவற்றைப் பெற்று பூஜை செய்வதே சிறந்ததாகும்.
சாளக்கிராம மந்திரம்:
"ஓம் விஷமந் நாஷாய வித்மஹே
விஷ்ணு வாஸாய தீமஹி
தந்நோ சிலா ப்ரசோதயாத்"
இதை உபதேசம் பெற்று தினமும் இருபத்தி ஏழு முறை ஜபித்து, சாளக்கிராம பூஜை செய்து வந்தால் சகல தோஷ நிவாரணம் ஏற்பட்டு வாழ்வில் பெரியோர்கள் மதிக்கும் நல்ல நிலையை பெறலாம். மேலும் சாளக்கிராமத்தின் மூல மந்திரத்தை இங்கு காணலாம். இதை அனைவரும் உச்சாடனம் செய்து துளசி தீர்த்தம், நைவேத்தியம் செய்து தூப, தீபம் சமர்ப்பித்து வணங்கி வரலாம்.
"ஓம் நமோ பகவதே விஷ்ணுவே
ஸ்ரீ சாளக்கிராம நிவாஸினே
சர்வா பீஷ்ட பலப்ப்ரதாய
சகல துரித நிவாரினே
சாளக்கிராமய ஸ்வாஹா"
இந்த மந்திரத்தை 27 54 108 என்ற எண்ணிக்கைகளில் துளசி மாலை கொண்டு ஜபம் செய்து வர வேண்டும். இந்த மந்திரமும் சர்வதோஷ நிவாரணியாக செயல்படும் என்பதை நடைமுறையில் நாம் நிச்சயமாக தெரிந்து கொள்ளலாம். சாளக்கிராம பூஜையை விரிவாகச் செய்ய கூடிய முறைகளும் உள்ளன. ஆனால் கால அவகாசம் அனைவர்க்கும் சம அளவில் வருவதில்லை. அதனைக் கருத்தில் கொண்டு 5 அல்லது 10 நிமிடங்களில் செய்ய கூடிய பூஜை முறைகளை இங்கு காணலாம்.
"ஓம் விஷ்ணு தேவாய வித்மஹே
வாசு தேவாய தீமஹி
தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத்"
இந்த மந்திரத்தை தினமும் காலையில் குளித்து விட்டு தூய ஆடைகளை அணிந்து தூய ஜலத்தால், சாளக்கிராமத்தை ஒரு சிறு செம்பு தட்டில் வைத்து அபிஷேகம் செய்து மென்மையான பட்டுத் துணியால் ஒற்றியெடுக்க வேண்டும். பின்பு சுத்தமான சந்தனக் குழம்பு கொண்டு முழுவதும் பூசிவிட வேண்டும். தொடர்ந்து திருமண்ணோ, குங்குமமோ சாத்தி பூக்கள் கொண்டு அலங்கரிக்க வேண்டும். சாளக்கிராம மூர்த்தத்தை தரையில் வைக்கக் கூடாது. வெள்ளி அல்லது பித்தளை, செம்பு தட்டில்தான் வைக்க வேண்டும். மஞ்சள் அல்லது வெண்பட்டு விரித்து அதில்தான் திருமேனியை இருக்க செய்ய வேண்டும். தீர்த்தத்திற்க்காக பச்சக் கற்பூரம், குங்குமப்பூ, ஏலக்காய், ஜாதிப்பத்திரி முதலியவற்றைப் பொடியாகச் செய்து வைத்துக் கொண்டு சிறிது சுத்த ஜலத்தில் கலந்தால் தீர்த்தமாக மாறுகிறது.
மேலும் மந்திர ஜபமும் பூஜா முறைகளும் தீர்த்தத்தை நமக்கு நன்மை தரும் சக்தி படைத்ததாக மாற்றி நம்முடைய பிராத்தனைகளை நிறைவேற்றி தருகின்றன. பூஜையை முதலில் கணபதியை வழிபட்டு
பிறகு சரஸ்வதி, லட்சுமிதேவி, பார்வதி தேவி ஆகியோரையும் வணங்க வேண்டும். பிறகு குரு வணக்கம் செய்து விட்டு நமக்கான மந்திர ஜபத்தை ஆரம்பித்துச் செய்து பூஜையை நிறைவு செய்யலாம்.
"ஓம் நாராயணாய வித்மஹே
வாசு தேவாய தீமஹி
தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத்"
Comments
Post a Comment