சங்கடர ஹர சதுர்த்தி
கஜானனம் பூத கணாதி ஸேவிதம்
கபித்த ஜம்பூ பலஸார பக்ஷதம்
உமாஸுதம் சோக வினாச காரணம்
நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்
சங்கடங்களை தீர்க்கும் சங்கட ஹர சதுர்த்தி இந்த விளம்பி வருடம் சித்திரை மாதம் 20 -ம் நாள் {03 -05 -2018 } வியாழக் கிழமை அன்று வருகிறது.
மும்மூர்த்திகளுக்கும், தேவர்களுக்கும் முதலானவர் விநாயகர். விநாயகரின் தொந்தி பிரம்மனின் அம்சமாகவும், முகம் திருமாலின் அம்சமாகவும், மூன்று கண்கள் சிவனின் அம்சமாகவும் திகழ்கின்றது. எனவே விநாயகப் பெருமானை வழிடாமல் எந்த தெய்வத்தையும் வழிபட இயலாது.
சிவபெருமானுக்கு எப்படி பிரதோஷ வழிபாடுவிஷேஷமோ அதே போல விநாயகருக்கு சங்கடஹர சதுர்த்தி வழிபாடு மிகவும் விஷேஷம் ஆகும். சங்கடஹர சதுர்த்தி அன்று முறையாக விரதம் இருந்து பிள்ளையாரை எவர் ஒருவர் வழிபடுகிறாரோ அவருக்கு பித்ருதோஷம் உள்ளிட்ட பல தோஷங்கள் நீங்கும். கடன் தொல்லையில் இருந்து விடுபடலாம். அதோடு நம் கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும். சங்கடம் என்றால் "கஷ்டம்" என்று பொருள், ஹர என்றால் "அழிப்பது"என்று பொருள். விரதம் இருந்து சங்கடங்களை அழிப்பதற்கான நாளையே சங்கடஹர சதுர்த்தி என்கிறோம். சங்கடஹர சதுர்த்தி நாளில் கீழே உள்ள பிள்ளையார் மந்திரம் அதை பாராயணம் செய்வதால் நமது கஷ்டங்கள் அனைத்தும் விலகும்.
ஓம் ஸ்ரீம் கணாதிபதையே ஏகதந்தாய லம்போதராய
ஹேரம்பாய ப்ரியாய மோதபக்ஷணாய
மமாபீஷ்ட பலம் தேஹி ப்ரதிகூலம் மே நஸ்யது
அநுகூலம் மே வஸமானய ஸ்வாஹா!!
சங்கட ஹர சதுர்த்தி நாளில் இந்த மந்திரத்தை கூறுவதன் பயனாக காரியம் சித்தி அடையும், திருமண தடை அகலும், கடன் தொல்லை தீரும். இப்படி எண்ணிலடங்கா பல நன்மைகள் இந்த மந்திரத்தின் மூலம் கிடைக்கும்.
மற்ற விரதங்களை போல் இல்லாமல் சதுர்த்தி விரதம் மட்டும் மாலை வேளையில் சந்திரன் உதயமாகும் தருணத்தில் தூய்மையான மனதோடு
பூஜை செய்ய வேண்டும். நாள் முழுவதும் பால், பழம், பழச்சாறு போன்ற திரவ உணவுகளையே எடுத்து கொள்ள வேண்டும்.
வீட்டிலுள்ள கணபதிக்கு பிடித்தமான புன்னை, மந்தாரை, செவ்வரளி, வில்வம், மாதுளம்பூ, ஜாதிமல்லி, மகிழம்பூ, பாதிரி, சம்பங்கி, மாம்பூ, அரளி, பவளமல்லி, குருந்தை, கண்டங்கத்திரிபூ, தும்பை, ஊமத்தை, முல்லை, செங்கழுநீர், தாழம்பூ, கொன்றை,அருகம்புல் போன்ற இருபத்தொரு மலர்களில் எவையேனும் ஒன்றை சமர்ப்பித்து பூஜை செய்ய வேண்டும்.
அருகிலிருக்கும் பிள்ளையார் கோவிலுக்கு சென்று அர்ச்சனை செய்து,,கோவிலை மூன்று முறை வலம் வந்து வழிபடலாம். கோவில்களில் அர்ச்சனை செய்யும் போது நமது வேண்டுதலுக்கு தகுந்தாற் போல கீழேயுள்ள 21 இலைகளில் எவையேனும் ஒன்றைக் கொடுத்து அர்ச்சனை செய்யலாம்.
நியாயம் கிடைக்க - மாவிலை
வாழ்வில் இன்பம் கிடைக்க - கரிசலாங்கண்ணி
இல்வாழ்க்கை இனிக்க - வில்வம் இலை
கல்வியில் வெற்றி பெற - இலந்தை
பொறாமை நீங்கி பெருந்தன்மை
பெருக - ஊமத்தை
வசீகரம் - நாயுருவி
தைரியம், வீரம்,விவேகம் பெற - கண்டங்கத்திரி
வாழ்க்கையில் வெற்றி பெற - அரளி
உயர் பதவி,நன்மதிப்பு கிடைக்க - அரசு
திருமணத் தடை விலகி நல்ல
வரன் அமைய -- தவனம்
இல்லறம் சுகம் பெற -- மரிக்கொழுந்து
செல்வ செழிப்பு பெற -- நெல்லி
குழந்தை வரம் பெற -- மருதம்
கடன்தொல்லையிலிருந்து விடுபட -- அகத்திக்கீரை
சொந்த வீடு, பூமி பாக்கியம் -- ஜாதிமல்லி
ஞானம், அறிவு, தன்னம்பிக்கை
பெறுவதற்கு -- துளசி
பெரும், புகழும் கிடைக்க -- மாதுளை
கருவிலுள்ள சிசுவிற்கு பாதுகாப்பு
மற்றும் வம்சம் விருத்தியடைய -- எருக்கு
சகல வித பாக்கியம் பெற -- அருகம்புல்
அனைத்து கஷ்டங்களையும் தாங்கும்
இதயம் பெற -- தேவதாரு
இவ்வுலகில் வாழும் காலத்திலும்
அதற்கு பிறகும் நன்மைகள் கிடைக்க -- வன்னி
கணபதிக்கு உகந்தது வன்னி மரம். அன்றைய தினத்தில் இம்மரத்தை வலம் வருதல் கூடுதல் பலனை அளிக்கும். ஆன்மீக ரீதியாக வன்னி மரத்தை தொட்டாலும், வலம் வந்தாலும் பாவ வினைகள் அகலும் என்பார்கள். அதன் காற்றோ, இலையோ நம் மேல் பட்டால் சரும நோய்களு, தீராத நோய்களும் தீரும். உங்கள் கஷ்டங்களை யானை முகனிடம் சமர்ப்பித்துவிட்டு முழுமனதோடு வேண்டிக்கொள்ள அனைத்து வினைகளையும் கலைப்பான் சக்தி மைந்தன்.
தத் கணேஷாய வித்மஹே
ஆக்கு வாஹாய தீமஹி
தந்நோ தந்தி ப்ரசோதயாத்!!
Comments
Post a Comment